போலி நகைகளை அடகு வைத்து ரூ.500 நோட்டுகளுடன் ரீல்ஸ் போட்ட 7 பேர் கைது!

 
போலி நகைகள் மோசடி

தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அசல் தங்க நகைகள் எனக் கூறி வங்கிகள் மற்றும் அடகுக் கடைகளில் அடகு வைத்துப் பல லட்ச ரூபாய் மோசடி செய்த 7 பேர் கொண்ட கும்பலை நாகப்பட்டினம் மாவட்டக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கும்பல், அசல் தங்க நகைகளைப் போன்றே தோற்றம் அளிக்கும் வகையில் பித்தளை மற்றும் செம்பு நகைகளில் உயர்தரத் தங்க முலாம் பூசி வந்துள்ளது. பின்னர், அந்தப் போலி நகைகளை அசல் தங்கம் என்று நம்பவைத்து பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் கடைகளில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.


போலி நகைகளை அடகு வைத்து முறைகேடாகப் பெற்ற பணத்தைக் கொண்டு இந்தக் கும்பல் மிக ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளது. மேலும், மோசடி மூலம் கிடைத்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் பணக்கட்டுகளை கைகளில் வைத்துக்கொண்டு, பின்னணி இசையுடன் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' வீடியோக்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின.

இதற்கிடையே, போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்யப்பட்டது குறித்துக் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், கீழையூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ரவுடி போலீசார் கைது கொலை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சமூக வலைத்தளங்களில் பணக்கட்டுகளுடன் ரீல்ஸ் வீடியோ போட்ட நபர்களே இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த 7 பேரையும் காவல்துறையினர் சுற்ற வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து போலி நகைகள், மோசடிக்குப் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் பணக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.