கிருஷ்ணகிரியில் வெறிநாய் கடித்து 7 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் அனுமதி!

 
வெறிநாய் நாய்க்கடி நாய் கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் குருபரப்பள்ளி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெறிபிடித்த நாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற பொதுமக்களைத் துரத்தித் துரத்திக் கடித்துக் குதறியதில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் பெருகிவரும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொதுமக்களும் கிராமவாசிகளும் கடும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட குருபரப்பள்ளி கிராமப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே நூற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்தச் சூழலில், நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்களில் அப்பகுதியில் உலா வந்த வெறிபிடித்த நாய் ஒன்று, சாலைகளில் நடந்து சென்றவர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றித் திடீரெனத் துரத்திச் சென்று சரமாரியாகக் கடித்துக் குதறியது.

வெறிநாய் நாய்க்கடி நாய் கிருஷ்ணகிரி

இந்த தாக்குதலில் குருபரப்பள்ளி வேணுகோபால் தெருவைச் சேர்ந்த சரஸ்வதி, விபுஷணன், அரிச்சரன், ஞானவேல், தாண்டவன் உள்ளிட்ட 7 பேர் பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்த காயம்பட்டவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, உடனடியாகச் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சையும் ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன.

குருபரப்பள்ளி கிராமத்தில் பொதுமக்கள் மீது வெறிநாய் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக விழித்துக்கொண்டது. வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்திரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி கடலரசு ஆகியோர் அடங்கிய குழுவினர் உடனடியாகக் குருபரப்பள்ளி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் உதவியோடு அந்த வெறிநாயை மிகுந்த சிரமத்திற்கிடையில் உயிருடன் பிடித்த அதிகாரிகள், அதனை மேல் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.