நர்மதா ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 7 பேர் பலி; 10 பேரைத் தேடும் பணி தீவிரம்!

 
நர்மதா படகு கவிழ்ந்து நர்மதா படகு கவிழ்ந்து

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பார்கி அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு ஜபல்பூர் நகரில் உள்ள பார்கி அணைப் பகுதியில் சுற்றுலாவாசிகள் பலர் படகு சவாரி செய்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் மிக பலத்த காற்று வீசியுள்ளது. காற்றின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் படகு நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. படகில் பயணம் செய்தவர்கள் நீரில் மூழ்கித் தத்தளித்தனர்.

படகு

இந்தக் கோர விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து நடந்தவுடன் உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு 15-க்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டுள்ளனர். இருப்பினும், படகில் பயணித்தவர்களில் மேலும் 6 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைக் கண்டறிய தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபங்களைச் சொன்னதுடன், மீட்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பிரதேசம்: நர்மதா

சம்பவ இடத்திற்குப் பொதுப்பணித் துறை அமைச்சர் ராகேஷ் சிங் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் தர்மேந்திர சிங் லோதி ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகளை வழங்கவும், காணாமல் போனவர்களை விரைவாகக் கண்டுபிடிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அதிகப்படியான பயணிகள் ஏற்றப்பட்டார்களா அல்லது வானிலை எச்சரிக்கையை மீறிப் படகு இயக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜபல்பூர் பகுதியில் நிலவும் இந்தச் சோகமான சூழல் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.