உத்தராகண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 7 பேர் பலி; 14 பேர் படுகாயம்!

 
சுரங்கப்பாதை

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நீர்மின் நிலையச் சுரங்கப்பாதைக்குள் இடிபாடுகளும் நீரும் புகுந்து ஏற்பட்ட கொடூர விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

சமோலி மாவட்டத்தில் உள்ள மாயாபூர் பகுதியில் THDC நிறுவனத்தின் நீர்மின் நிலைய திட்டத்திற்காக HCC நிறுவனத்தால் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது.

நேற்று ஆகஸ்ட் 13ம் தேதி எதிர்பாராதவிதமாகச் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, உள்ளே இடிபாடுகளும் தண்ணீரும் புகுந்ததில் அங்குப் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். விபத்தின் போது சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த மொத்தம் 22 தொழிலாளர்களில், இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 14 தொழிலாளர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுரங்கப்பாதை

சுரங்கப்பாதைக்குள் இன்னும் சிக்கியுள்ள எஞ்சிய இரு தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.