கொடூரம்... 7 மாத குழந்தையின் கண்முன்னே இளம் தாய் தூக்கிட்டுத் தற்கொலை!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே கணவனின் கள்ளத்தொடர்பு விவகாரத்தால் மனமுடைந்த இளம் தாய் ஒருவர் தனது 7 மாதக் குழந்தையின் கண் முன்னே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிக்மகளூருவைச் சேர்ந்த சானிகா கவுடா என்பவருக்கும் பெங்களூருவில் ஓட்டுநராகப் பணிபுரியும் சரண் கவுடா என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்ததால், தம்பதியினரிடையே அடிக்கடி கடுமையான குடும்பத் தகராறு மற்றும் சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

இதன் காரணமாகக் கர்ப்பமாக இருந்த சானிகா பெற்றோர் வீட்டிற்குச் சென்ற நிலையில், குழந்தை பிறந்த பிறகும் கணவர் வீட்டிற்குத் திரும்பாமல் அங்கேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவர் சரண் கவுடா அந்தப் பெண்ணுடன் பேசிய உரையாடல் ஆடியோவை சானிகாவின் கைபேசிக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த ஆடியோவைக் கேட்டு பேரதிர்ச்சியும் வேதனையும் அடைந்த சானிகா, கணவரை உடனடியாக வீடியோ காலில் அழைத்து கதறி அழுது காரசாரமாக வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வீடியோ கால் இயங்கிக் கொண்டிருக்கும் போதே, 7 மாதக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

7 மாதக் குழந்தையைத் தவிக்கவிட்டுத் தாய் எடுத்த இந்த விபரீத முடிவால் அப்பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சானிகாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தந்தையின் புகாரின் பேரில் பரப்பன அக்ரஹாரா காவல் துறையினர் தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள கணவர் சரண் கவுடாவைப் பிடிக்கக் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
