தமிழகத்தில் புதிதாக 7 அரசு நர்சிங் கல்லூரிகள் தொடக்கம் - அரசாணை வெளியீடு.. ஆயிரக்கணக்கான கூடுதல் இடங்கள் உருவாக்கம்!

 
நர்ஸ் செவிலியர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர்

தமிழ்நாட்டில் செவிலியர் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், மாணவர்களின் சேர்க்கை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கிலும் புதிதாக 7 அரசு நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அரசு நர்சிங் கல்லூரிகள் எவையும் தொடங்கப்படாமல் இருந்த நிலையில், செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் மொத்தம் ரூ.351 கோடியில் ஆயிரக்கணக்கான கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் முன்னதாக அறிவித்திருந்தார்.

மருத்துவர்கள் மருத்துவர் டாக்டர்

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நெல்லை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் தலா 100 பி.எஸ்சி செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்களுடன் 6 புதிய அரசு நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதற்கான ரூ.270.26 கோடி செலவீன முழுத் தொகையும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிலேயே இந்தந்த கல்லூரிகளில் உள்ள இடவசதியைக் கொண்டு 600 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கூடுதலாக 60 பி.எஸ்சி செவிலியர் இடங்களுடன் 7-வது புதிய அரசு நர்சிங் கல்லூரியும் அமைக்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு நர்சிங் கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளில் 1,925 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கலந்தாய்வு டாக்டர் மருத்துவர் எம்பிபிஎஸ்

டி.ஜி.என்.எம். படிப்பில் 1,290 இடங்கள், பி.எஸ்சி நர்சிங் படிப்பில் 440 இடங்கள், எம்.எஸ்சி நர்சிங் படிப்பில் 75 இடங்கள் மற்றும் பட்டப்படிப்புக்கு பிந்தைய பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 120 இடங்கள் என மொத்தம் 2,585 கூடுதல் நர்சிங் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,788 இடங்களும், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்களும் உருவாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.