இன்ஸ்டா பதிவால் மாணவர்களுக்கிடையே மோதல் - நெல்லையில் 7 மாணவர்கள் கைது!

 
இன்ஸ்டா

சமூக வலைதளப் பதிவில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக நெல்லை சந்திப்பு பகுதியில் இரு தரப்பு மாணவர்களும் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மோதலில் ஈடுபட முயன்ற 7 மாணவர்கள் மற்றும் ஒரு வாலிபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மாணவர் ஒருவர் பதிவிட்ட கருத்தை மற்றொருவர் கிண்டல் செய்து விமர்சித்துள்ளார். இந்தத் தகராறு நாளுக்கு நாள் வளர்ந்து இரு தரப்பு மாணவர்களுக்கிடையே பகையை உருவாக்கியுள்ளது.

இன்ஸ்டா

இதனைத் தொடர்ந்து, நெல்லை சந்திப்பு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரெனத் திரண்டு ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது.

மேட்டு பிராஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவர், தனது நண்பர்களைத் திரட்டிக்கொண்டு எதிர் தரப்பு மாணவரைத் தாக்கும் நோக்கில் அங்கு சென்றது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்மந்தமான தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மோதலில் ஈடுபட முயன்ற 7 மாணவர்கள் மற்றும் ஒரு வாலிபரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறைவான மேலும் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.