7 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து... திருப்பத்தூரில் இன்ஜின் இன்றி 6 கி.மீ தூரம் ஓடிய ரயில்!
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே யார்டான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், ரயில்வே ஊழியர்களின் கடும் அலட்சியத்தால் இன்ஜின் இல்லாத 7 காலி ரயில் பெட்டிகள் தன்னிச்சையாக 6 கிலோமீட்டர் தூரம் ஓடித் தடம் புரண்ட சம்பவம் ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், பணியில் இருந்த கேட் கீப்பரின் மின்னல் வேகச் செயலால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
16 ரயில் பாதைகளைக் கொண்ட ஜோலார்பேட்டை சந்திப்பு ரயில்வே யார்டில், பழுதுபார்க்கும் பணிக்காக 7 காலி ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்ஜின் மூலம் இந்தப் பெட்டிகளை வேறு பகுதிக்கு மாற்றும் பணியின்போது, ஊழியர்கள் பெட்டிகளை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளனர். மேலும், சக்கரங்களில் பாதுகாப்புப் பிடிப்பான்களை மாட்டி நிலைநிறுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளனர்.

பிடிப்பான்கள் இல்லாததால் 7 காலி பெட்டிகளும் தண்டவாளத்தில் தானாக உருளத் தொடங்கின. யார்டின் எல்லைகளைத் தாண்டிய அந்தப் பெட்டிகள், பெங்களூரு - ஜோலார்பேட்டை பிரதான ரயில் பாதையில் இன்ஜின் இல்லாமலேயே அசுர வேகத்தில் பாய்ந்து சென்றன.
சுமார் 6 கிலோமீட்டர் தூரம் தறிகெட்டு ஓடிய அந்தப் பெட்டிகள், தமலேரி முத்தூர் பகுதிக்கு அருகில் வந்தபோது பயங்கர சத்தத்துடன் தண்டவாளத்தை விட்டு விலகித் கீழே இறங்கித் தடம் புரண்டு நின்றன.
பெட்டிகள் தடம் புரண்ட சத்தத்தைக் கேட்டு உஷாரான ரயில்வே கேட் கீப்பர், உடனடியாக ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அவசரத் தகவல் கொடுத்தார். இதனால் சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் வந்துகொண்டிருந்த அனைத்து ரயல்களும் ஆங்காங்கே அவசரமாக நிறுத்தப்பட்டு, மாபெரும் ரயில் மோதல் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

தகவலறிந்து விரைந்த ரயில்வே மீட்புக்குழுவினர், கேஸ்-கட்டிங் கருவிகள் மூலம் பெட்டிகளின் இரும்பு இணைப்புகளைத் துண்டித்து, ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தடம் புரண்ட பெட்டிகளைத் தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்து காரணமாக பெங்களூரு - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் பல ரயில்களின் சேவையில் திடீர் தாமதம் ஏற்பட்டுப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஊழியர்களின் இந்தச் சீரியசான அலட்சியம் குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
