திருச்செந்தூரில் திடீரென 70 அடி தூரம் உள்வாங்கிய கடல்: ஆபத்தை உணராமல் 'செஃல்பி' எடுத்த பக்தர்கள்!
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரைப் பகுதியில் நேற்று காலை திடீரெனக் கடல் நீர் சுமார் 70 அடி தூரத்திற்குப் பின்னோக்கி உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் மறைந்திருந்த பாசி படர்ந்த ஆபத்தான பாறைகள் வெளியே தெரிந்த நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஆபத்தான முறையில் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இந்த இயற்கை மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள், அதற்கு முந்தைய நாள் மற்றும் அடுத்த நாட்களில் கடலில் அலைகளின் சீற்றம் மாறுபடுவதும், கடல் நீர் உள்வாங்குவதும் புவியீர்ப்பு விசை காரணமாகக் காலங்காலமாக நடக்கும் ஒரு வழக்கமான நிகழ்வுதான்.

அமாவாசை தினத்தை முன்னிட்டு, நேற்று காலையில் வழக்கத்தை விடக் கூடுதலாகச் சுமார் 70 அடி தூரத்திற்குப் பாறைகள் தெரியும் அளவிற்குப் பின்னோக்கி உள்வாங்கியது. கடல் நீர் உள்வாங்கியதைத் தொடர்ந்து, கடலுக்கு அடியில் இருந்த வழுக்கக்கூடிய பாசி படர்ந்த பாறைகள் மற்றும் பாறைப் படிவங்கள் முழுமையாக வெளியே தெரிந்தன.
இதனைக் கண்ட ஆச்சரியத்தில் கடற்கரைக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள், கடல் எந்த நேரத்திலும் மீண்டும் ஆக்ரோஷமாக முன்னோக்கி வரலாம் என்ற அடிப்படை ஆபத்தை முற்றிலும் உணராமல், அந்தப் பாறைகளின் மீது ஏறி நின்று தங்களது மொபைல் போன்களில் ஆபத்தான முறையில் புகைப்படங்கள் மற்றும் செல்பிகளை எடுக்கத் தொடங்கினர். பாறைகள் வழுக்கும் தன்மை கொண்டவை என்பதால் நிலைதடுமாறிக் கடலுக்குள் விழும் அபாயமும் அங்கு நிலவியது.

பக்தர்களின் இந்த அசாத்திய துணிச்சலையும் அலட்சியத்தையும் கவனித்த திருச்செந்தூர் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் உடனடியாகச் களத்தில் இறங்கினர்.
பாறைகளின் மேல் நின்றிருந்த பக்தர்களை எச்சரித்து அங்கிருந்து அவசரமாக அப்புறப்படுத்தினர். மேலும், கடல் நீர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை பக்தர்கள் யாரும் கடலின் உள்வாங்கிய பகுதிக்குள்ளோ அல்லது பாறைகளின் மீதோ செல்லக் கூடாது என ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ந்து கடலோரப் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துக் கண்காணித்து வருகின்றனர்.
