71 படகுகள், ரூ.25 லட்சம் பரிசுத்தொகை... கேரளத்தில் ஓணம் படகுப் போட்டி துவங்கியது!
கேரள மாநில ஓணம் படகுப்போட்டி உலகப் புகழ்பெற்றது. ஓணம் பண்டிகையையொட்டி நடத்தப்படும் இந்த படகுப் போட்டியைக் காண உலகின் பல பகுதிகள் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆலப்புழாவில் குவிகிறார்கள்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் புன்னமடா காயலில் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு 72-வது நேரு டிராபி படகுப்போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த பாரம்பரிய போட்டியைத் காணவும், உற்சாகமாகக் கண்டுகளிக்கவும் ஏராளமான மக்கள் இப்பகுதியில் குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த பாரம்பரிய போட்டியில் நீர்வாழ் சுண்டன்கள் எனப்படும் 22 பாம்பு படகுகள் உட்பட மொத்தம் 71 படகுகள் வீரர்களுடன் பங்கேற்று வருகின்றன. வீரர்களின் உற்சாகக் குரல்களுடனும், பாரம்பரியப் பாடல்களுடனும் நடைபெறும் இந்தப் போட்டி அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. வண்ணமயமான படகுகளின் அணிவகுப்பு பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த உலகப் புகழ்பெற்ற படகுப் போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆலப்புழாவில் திரண்டுள்ளனர். பாதுகாப்பான முறையில் போட்டிகளை நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும் விழாக்குழுவினரும் சிறப்பாகச் செய்துள்ளனர்.
