தமிழகத்தில் 75,064 வாக்குச்சாவடிகள் தயார்... 3.6 லட்சம் அதிகாரிகள் கண்காணிப்பு, 1,06,418 மின்னணு இயந்திரங்கள் - முழு விபரங்களை வெளியிட்டார் அர்ச்சனா பட்நாயக்!
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்துத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
தமிழகம் முழுவதும் 33,133 இடங்களில் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்காக 1,06,418 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. இவை அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த மையங்களுக்கு அனுப்பும் பணி இன்று மதியத்திற்குள் நிறைவடைந்தது. சுமார் 3,60,068 அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இத்தேர்தலில் மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் மற்றும் 83,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப்-காஸ்டிங் மூலம் நேரடி கண்காணிப்பு செய்யப்படும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு மையங்களுக்குச் செல்பவர்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
