ஒரே நாள் இரவில் 76 ரவுடிகள் கைது - போதைப்பொருள் கும்பலுக்கு செக்!
தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கவும் காவல் துறை நடத்திய அதிரடி வேட்டையில், ஒரே நாள் இரவில் 76 ரவுடிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் போதைப்பொருள் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை ஒடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், நேற்று (மே 19) இரவு முழுவதும் 'ஸ்பெஷல் ஆபரேஷன்' நடத்தப்பட்டது.

மண்டல வாரியாகப் பிரிந்து சென்ற தனிப்படை போலீசார், ரவுடிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் அவர்களின் மறைவிடங்களை அதிரடியாகச் சோதனையிட்டனர். இந்த அதிரடி வேட்டையின் போது, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மற்றும் தலைமறைவாக இருந்த 76 ரவுடிகளைப் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே, மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம், கஞ்சா நடமாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. பிடிபட்ட ரவுடிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, அவர்களுக்குப் போதைப்பொருள் சப்ளை செய்யும் முக்கிய குற்றவாளிகளைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. காவல் துறையின் இந்தத் தொடர் அதிரடி வேட்டையால் சென்னையில் உள்ள சமூக விரோத கும்பல்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன.
