துப்பாக்கிச் சூட்டில் 7 மாத குழந்தை பலி.. கதறிய தந்தை!
வெஸ்ட் பேங்க் எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், 7 மாத பச்சிளம் குழந்தை ஒன்று கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளையும், கடும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பஹத் அபு என்பவர், நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த இஸ்ரேல் ராணுவச் சோதனைச் சாவடி அருகே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் திடீரென பஹத் அபுவின் காரை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
துப்பாக்கியில் இருந்து பாய்ந்து வந்த தோட்டாக்கள் காரின் கண்ணாடிகளைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்றன. இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், காரில் இருந்த பஹத் அபுவின் 7 மாத ஆண் குழந்தை மீது தோட்டா பாய்ந்து, அந்தக் குழந்தை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தக் கொடூரச் சம்பவம் சர்வதேச ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை இதற்கு விளக்கம் அளித்துள்ளது. "அதிவேகமாக முன்னேறி வந்த அந்தக் கார், சோதனைச் சாவடியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது மோதுவது போல் வந்தது. இதனால் தற்காப்பு நடவடிக்கைக்காகவும் , சந்தேகத்தின் அடிப்படையிலுமே கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது" என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்ரேல் ராணுவத்தின் இந்த விளக்கத்தை மறுத்துள்ள குழந்தையின் தந்தை பஹத் அபு, "ராணுவ வீரர்கள் சைகை காட்டிய உடனே நான் காரை நிறுத்திவிட்டேன். ஆனால், காரை நிறுத்திய பிறகும் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அவர்கள் எனது காரை நோக்கிச் சுட்டனர். என் கண்ணெதிரே என் 7 மாத மகன் கொல்லப்பட்டுள்ளான். எனது மகனைக் கொன்ற அந்த ராணுவ வீரர் மீது சர்வதேச நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கண்ணீருடன் நீதி கேட்டுள்ளார்.
ஏற்கனவே மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், 7 மாத குழந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
