கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு... 4-வது மரணம் பதிவு.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!

 
கேரளா புதிய தொற்று நோய் காய்ச்சல் ஷிகெல்லா பாக்டீரியா வைரஸ் கேரளா புதிய தொற்று நோய் காய்ச்சல் ஷிகெல்லா பாக்டீரியா வைரஸ்

கேரள மாநிலத்தில் 'ஷிகெல்லா' எனப்படும் ஆபத்தான பாக்டீரியா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

கேரளாவின் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக ஷிகெல்லா பாக்டீரியா தொற்றின் வீரியம் அதிகரித்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின்படி, மாநிலம் முழுவதும் 138 பேருக்கு இந்தத் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாகப் கோழிக்கோடு மாவட்டத்தில்தான் பாதிப்புகள் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளன. இதுதவிர, மேலும் 77 பேருக்கு இந்தத் தொற்றின் அறிகுறிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு, அவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஷிகெல்லா

மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜாவ் (7) என்ற சிறுவனுக்குக் கடந்த ஜூன் 12-ஆம் தேதி திடீரெனக் கடுமையான காய்ச்சல் மற்றும் டயோரியா (வயிற்றுப்போக்கு) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அச்சிறுவன் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு அவனுக்கு நடத்தப்பட்ட ரத்த மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் குழுவினர் அவனுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையிலும், தொற்றின் வீரியம் காரணமாகச் சிறுவன் அர்ஜாவ் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்துடன் சேர்த்து, கேரளாவில் நடப்பு ஆண்டில் மட்டும் ஷிகெல்லா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷிகெல்லா என்பது மனிதர்களின் குடல் பகுதியைத் தாக்கும் ஒரு வகையான ஆபத்தான பாக்டீரியா தொற்றாகும். இது குறித்துப் பொதுமக்களுக்குக் கேரளா சுகாதாரத் துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தத் தொற்று ஏற்பட்டால் கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப் பிடிப்புடன் கூடிய வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறவும் வாய்ப்புள்ளது.

பிரிட்டன், ஜெர்மனியில் ஒமிக்ரான் தொற்று: பீதியில் மக்கள்!

சுகாதாரமற்ற, கெட்டுப்போன உணவுகளை உட்கொள்வது, அசுத்தமான குடிநீரைப் பயன்படுத்துவது மற்றும் இந்தத் தொற்று ஏற்கனவே ஏற்பட்ட நபர்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பதன் மூலமாக இந்த பாக்டீரியா மிக வேகமாக மற்றவர்களுக்கும் பரவுகிறது.

கேரளாவில் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் தங்களது கைகளைச் சோப்புப் போட்டுக் சுத்தமாகக் கழுவ வேண்டும் என்றும், காய்ச்சி வடிகட்டிய தூய்மையான குடிநீரையே பருக வேண்டும் என்றும், வெளி உணவுகளைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், எல்லையோர மாவட்டங்களிலும் இதற்கான கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.