கேரளாவில் 7 வயது சிறுமிக்கு ஷிகெல்லா தொற்று பாதிப்பு - சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கை!

 
ஷிகெல்லா தொற்று

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பரவல் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் கோழிக்கோடு மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாதாபுரம் அருகே உள்ள கும்பங்கோடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவருக்கும் இந்த தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி, கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி வசித்து வந்த கும்பங்கோடு பகுதியில் சுகாதாரத்துறையினர் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்து, நோய் பரவல் தடுப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஷிகெல்லா

தண்ணீர் மற்றும் உணவின் மூலமாகவே இந்த பாக்டீரியா தொற்று வேகமாகப் பரவக்கூடும் என்பதால், பொதுமக்களுக்குச் சுகாதாரத்துறையினர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். பொதுமக்கள் தங்களின் வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களில் குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும். குடிநீரை நன்றாகக் கொதிக்க வைத்த பின்னரே பருக வேண்டும். உணவைக் கையாளுவதற்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் கைகளைச் சோப்புப் போட்டுக் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

இந்தத் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான வயிற்றுப்போக்கு (சில நேரங்களில் இரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு), வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகியவை அறிகுறிகளாக இருக்கும்.

பாதிப்பு உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களை அணுகி மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.