தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை... வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை!

 
பனி, மழை பனி, மழை

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, இன்று (மே 2) மாநிலத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோடையின் உச்சத்தில் இந்த மழை செய்தி பொதுமக்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.

மழை

நாளை (மே 3) மற்றும் நாளை மறுநாள் (மே 4) ஆகிய தேதிகளிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 4-ஆம் தேதி ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையுடன் கூடிய பலத்த காற்றும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், இடி மின்னலின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெயில் மழை

வானிலை மாற்றங்கள் ஒருபுறமிருந்தாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும். அதிகப்படியான ஈரப்பதம் காரணமாகப் பொதுமக்களுக்குச் சற்று அசௌகரியமான சூழல் நிலவக்கூடும் என்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.