பண்ருட்டி அருகே பட்டாசுக் கடையில் பயங்கர வெடிவிபத்து: 2 பெண்கள் உட்பட 8 பேர் படுகாயம்!

 
பட்டாசு வெடிவிபத்து

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில், பட்டாசுக் கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி உட்கோட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெய்வேலி மெயின் ரோட்டில் ஆனந்தி என்பவர் வசித்து வருகிறார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நேற்று (07.11.2026) மாலை 5.45 மணியளவில் ஆனந்தி தனது வீட்டின் முன்பாகப் பட்டாசுகளை சேமித்து வைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாகப் பட்டாசுகள் உராய்ந்து திடீரென வெடித்துச் சிதறின. இதில் கடை மற்றும் வீட்டின் முன்பகுதி தீப்பற்றி எரிந்ததில் அங்கு நின்றிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினருடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தினர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் "பட்டாசு தயாரிக்கும் உரிமம் வைத்திருக்கும் ஆனந்தி என்பவர், அரசு வழங்கிய உரிமத்தில் குறிப்பிடப்படாத இடமான தனது வீட்டின் முன்பாகப் பட்டாசுகளைச் சேமித்து வைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில், உரிமையாளர் ஆனந்தி, அவரது குடும்பத்தினர் 5 நபர்கள் மற்றும் பட்டாசு வாங்க/பார்க்க வந்த 2 நபர்கள் என மொத்தம் 8 பேர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

உரிமம் பெறாத மற்றும் பாதுகாப்பு இல்லாத இடத்தில் பட்டாசுகளைச் சேமித்து வைத்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முத்தாண்டிக்குப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.