8 மொழிகள்.. 175க்கும் மேற்பட்ட படங்கள்... பிரபல திரைப்பட நடிகர் சத்யேந்திரா காலமானார்!
ஜப்பானிய மொழி, ப்ரெஞ்சு என்று 8 மொழிகளில் சரளமாக பேசுவார். ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமா உலகில் தங்களது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்த கலைஞர்கள் வரிசையில், 175-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சத்யேந்திரா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
சத்யேந்திரா, தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு என 8 மொழிப் படங்களில் பல்வேறு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். எடிட்டர் லெனின் நாக்-அவுட் குறும்படம் மூலமாக அறிமுகமானார். தமிழில் இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில், ரகுவரன் நடிப்பில் வெளியான 'ஏழாவது மனிதன்' (1982) திரைப்படத்தின் மூலம் சத்யேந்திரா ரசிகர்களிடையே கவனம் பெறத் துவங்கினார்.
பாரதிராஜாவின் 'மண்வாசனை', சத்யராஜ் நடிப்பில் வெளியான 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', கமலஹாசனின் 'சத்யா' மற்றும் அண்மையில் வெளியான ஜி.வி.பிரகாஷின் 'ஜெயில்' உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களில் சத்யேந்திரா நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பதை விட, சமீபக் காலமாகத் யூடியூப் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் சினிமா விமர்சகராக சத்யேந்திரா வலம் வந்தார். தற்போதைய நவீனத் திரைப்படங்களின் தரம், திரைக்கதை உத்திகள் குறித்துத் தனது பாணியில் நேர்மையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். குறிப்பாக, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தைப் பகுப்பாய்வு செய்து அவர் வெளியிட்ட விமர்சனம் இணையத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கி, இவரைப் பலரிடமும் பரவலாகக் கொண்டு சேர்த்தது.
நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், மருத்துவர்களின் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகும் அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்த திரையுலகைச் சேர்ந்த மூத்த நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் சமூக வலைதளச் சினிமா விமர்சகர்கள் பலரும் சத்யேந்திராவின் மறைவிற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
