"ஒரே நாளில் 8 கொலைகள்; தமிழகத்தில் சீரழிந்த சட்டம் - ஒழுங்கு" - எடப்பாடி கடும் விமர்சனம்!

 
எடப்பாடி பிரச்சாரம்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும், ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு மக்கள் நலனில் அக்கறையின்றிச் செயல்படுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்துத் தளவாய்பட்டினம் பகுதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இத்தகைய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.எல்.ஏ.-வாக வெற்றி பெற்றுப் பின்னர் பதவி விலகித் தவெக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள சத்யபாமாவைக் கடுமையாக விமர்சித்தார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிபெறுவது எளிதான காரியமல்ல என்றும், ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இரவும் பகலும் பாராமல் உழைத்து வெற்றிபெறச் செய்த நிலையில், குதிரை பேரம் மூலம் விலைக்குப்போய் மக்கள் தீர்ப்பைக் கொச்சைப்படுத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

கஞ்சா கொலை

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுக எம்.எல்.ஏ.-வை ராஜினாமா செய்ய வைத்துத் தங்களது கட்சியில் இணைத்துக் கொண்ட தவெக ஒரு "தூய சக்தி" அல்ல, அது "திருட்டு சக்தி" என்று விமர்சித்தார். தவெக தலைவர் விஜய், முன்பு தனது திரைப்படம் தொடர்பான பிரச்சனைக்காகத் தனது வீட்டின் முன் மணிநேக்கணக்கில் காத்திருந்ததை நினைவூட்டிய எடப்பாடி பழனிசாமி, அவருக்குக் குறைந்தபட்ச நன்றியுணர்வு கூட இல்லை என்று சாடினார்.

மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 8 கொடூரக் கொலைகள் நடந்துள்ளதாகவும், தவெக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் 285-க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ளதாகவும் அவர் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டினார்.

கொலை இரட்டைக்கொலை ஆய்வு போலீசார் சிவகங்கை

தவெக ஆட்சிக்கு வந்து மக்கள் நலனுக்காகச் சாதித்தது எதுவுமில்லை என்றும், முதலமைச்சர் விஜய் ஒரு 'டம்மி முதலமைச்சராக' செயல்பட்டு வருகின்றார் என்றும் விமர்சித்தார். சட்டமன்றத்தில் எழும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்காமல் அமைச்சர்களே பதிலளிக்கும் நிலை உள்ளதாகச் சாடினார்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் மக்கள் துரோகிகளுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் பிரச்சாரத்தின் நிறைவில் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.