மாணவர்களுக்கிடையே மோதல்.., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 8 மாணவர்கள் கைது - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் பகுதியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட விளையாட்டு மோதல் முற்றி, பட்டியலின மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 சிறார் மாணவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள பிரம்மகுண்டம் பேருந்து நிலையத்தில், அங்குள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்களிடையே 'கில்லி' விளையாட்டு விளையாடும் போது சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் பின்னர் பள்ளி வளாகத்திற்குள்ளும் தொடரந்து தாக்குதலாக மாறியுள்ளது.

பள்ளியின் வளாகத்தில் நடைபெற்ற இந்த மோதலின் போது, பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.
பள்ளியில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கையும் தீர்வும்காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோரும் உறவினர்களும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்துத் தகவலறிந்த வடபொன்பரப்பி காவல் நிலையக் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், குற்றச் செயலில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்ட 8 பள்ளி மாணவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
