அசுத்தமான கிணற்று நீரை குடித்த 80 பேர் மருத்துவமனையில் அனுமதி... மத்தியப் பிரதேசத்தில் பரப்பரப்பு!

 
வாயு மருத்துவமனை

மத்தியப் பிரதேச மாநிலம் ராட்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மாசடைந்த கிணற்றுத் தண்ணீரைக் குடித்த 80 கிராம மக்கள் அடுத்தடுத்து கடுமையான உடல்நலக்குறைவுக்கு ஆளாகியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராட்லம் மாவட்டத்தின் அசம்பூர் தோடியா கிராம மக்கள், அங்குள்ள ஒரு பொதுக்கிணற்றின் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், அதையே தங்களின் முதன்மை குடிநீர் ஆதாரமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக இந்தக் கிணற்று நீரைப் பயன்படுத்திய கிராம மக்களுக்கு, அடுத்தடுத்து திடீரென வாந்தி, பேதி மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்தமாக 80 பேர் வரை உடல்நலம் பாதிக்கப்பட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக, பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் முற்றிலும் குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களுக்குத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாயு  மருத்துவமனை  உயிரிழப்பு ஆம்புலன்ஸ் கொலை

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் அசம்பூர் தோடியா கிராமத்திற்கு விரைந்து சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட சோதனையில், கிராம மக்கள் பயன்படுத்தி வந்த அந்த குறிப்பிட்ட கிணற்று நீர் முற்றிலும் மாசடைந்திருந்தது கண்டறியப்பட்டது. 

சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட கிராமத்தில் வீடு வீடாகச் சென்று மக்களின் உடல்நிலையை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அவசரப் பரிசோதனைகளுக்காகக் கிராமத்திலேயே சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கிணற்று நீர் மாசடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மறு உத்தரவு வரும் வரை அந்த கிணற்றுத் தண்ணீரை யாரும் குடிக்கவோ அல்லது இதர வீட்டு உபயோகங்களுக்குப் பயன்படுத்தவோ கூடாது எனப் பொதுமக்களுக்கு அதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.