80-வது சுதந்திர தின விழா... டெல்லி செங்கோட்டையில் 20,000 வீரர்கள் குவிப்பு - உச்சக்கட்ட பாதுகாப்பு!
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார். இதனையொட்டி தலைநகர் டெல்லியில் 20,000 பாதுகாப்புப் படையினருடன் பல அடுக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி காவல்துறை, துணை ராணுவப் படைகள், கமாண்டோக்கள், 'ஹிட் டீம்' சிறப்புப் படைகள் மற்றும் என்எஸ்ஜி துப்பாக்கிச் சுடும் வீரர்கள் என சுமார் 20,000 வீரர்கள் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், வாகன எண் பலகையைக் கண்டறியும் முறை மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மூலம் செங்கோட்டை பகுதி முழுமையாகக் கண்காணிக்கப்படுகிறது. உள்ளூர் காவல் அமைப்புகள், போக்குவரத்துப் பிரிவு, தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் விரைவு அதிரடிப் படைகள் அனைத்துச் சூழல்களையும் எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஆகஸ்ட் 7 காலை முதல் ஆகஸ்ட் 8 அதிகாலை வரை 'சுதர்ஷன் சக்தி-5' என்ற ஐந்தாம் கட்ட கூட்டுத் தடுப்பு மாதிரிப் பயிற்சி நடத்தப்பட்டது. டெல்லி காவல்துறையும் என்எஸ்ஜி படையும் இணைந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், காஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி, செங்கோட்டை மெட்ரோ நிலையம், பால்காஜி கோயில் மற்றும் கன்னாட் பிளேஸ் ஆகிய முக்கிய இடங்களில் இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
