அரசுப் பள்ளி விடுதியில் 82 மாணவர்களுக்குப் பாதி மொட்டையடிக்கப்பட்ட அவலம் - பெற்றோர் அதிர்ச்சி!

 
மொட்டை மாணவர்கள் விடுதி சிறார்கள்

மகாராஷ்டிராவில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் விடுதி கண்காணிப்பாளரின் விசித்திரமான செயலால் 82 மாணவர்களுக்குப் பாதி மொட்டையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர், சிமூர் தாலுகா, ஜம்புல்காட் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி உண்டு உறைவிடப் பள்ளியில் 82 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்வதற்காகப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த விடுதி கண்காணிப்பாளர், மாணவர்களின் தலைமுடியில் பாதியை மட்டும் வெட்டுமாறு முடிதிருத்துபவரிடம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 82 மாணவர்களுக்கும் தலைமுடியில் பாதி மட்டும் வெட்டப்பட்டு அவமானகரமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெற்றோரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

விவகாரம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதும், உடனடியாக மாணவர்களின் தலைமுடியை ஒரே சீராக முழுமையாக வெட்டுமாறு உத்தரவிடப்பட்டு, நள்ளிரவில் மீண்டும் முடிதிருத்தம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுப் பள்ளி முதல்வர் பிரசாந்த்கிரி விடுதி கண்காணிப்பாளருக்குக் குறிப்பாணை அனுப்பியுள்ளார்.

மறுபுறம், இந்த முடிவு மாணவர்களின் நலனுக்காகவே எடுக்கப்பட்டதாகவும், இதன் பின்னணியில் எந்தத் தவறான நோக்கமும் இல்லை என்றும் கண்காணிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள போதிலும், பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.