தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு கடித்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு!
தலையணைக்கு அடியில் எமன்! தூக்கத்தில் இருந்த 8 வயது சிறுவன் பாம்பு கடித்து பலி - கேரளாவில் நேர்ந்த பயங்கரம்!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சூர் கொடாலியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் அல்ஜோ, தனது சகோதரர் அனோத்துடன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாகப் படுக்கையில் இருந்த பாம்பு ஒன்று அல்ஜோவைக் கடித்துள்ளது. அதிகாலையில் சிறுவன் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது, அவனது பெற்றோர் முதலில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்றே கருதியுள்ளனர்.

சிறுவனின் நிலைமை மோசமடையவே, அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவனது உடலில் பாம்பு கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்தான். அவனது சகோதரர் அனோத்துக்கும் பாம்பு கடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவனுக்குத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் உறங்கிய அறையைச் சோதனை செய்தபோது, தலையணைக்கு அடியில் மறைந்திருந்த பாம்பைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடைக்காலத்தில் குளிர்ச்சியைத் தேடி பாம்புகள் வீடுகளுக்குள் நுழையக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்கள் படுக்கை மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், தூங்கும் முன் படுக்கையைச் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
