ஆம்பூரில் 8 வயது சிறுமி மாயம்... பதறிய பெற்றோர்... சாமர்த்தியமாக செயல்பட்டு, ஒரே மணி நேரத்தில் மீட்ட போலீசார்!

 
சிறுமி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கடைக்குச் சென்று விட்டு மர்மமான முறையில் காணாமல் போன 8 வயது சிறுமியை, புகார் பெற்ற ஒரே மணி நேரத்தில் காவல்துறையினர் சாமர்த்தியமாகத் தேடி மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ரெட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். சிறுமி கடைக்குச் சென்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தீவிரமாகத் தேடியுள்ளனர். சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாத சூழலில், உடனடியாக ஆம்பூர் டவுன் காவல் நிலையத்திற்குச் சென்று பெற்றோர் முறைப்படி புகார் அளித்தனர்.

சிறுமி

சிறுமியின் காணாமல் போன விவகாரம் குறித்தத் தகவலை அறிந்ததும், திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அக்ஷய் அனில் வாகரே உடனடியாக அதிரடி உத்தர பிறப்பித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சிறுமியின் விவரங்கள் பகிரப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள மற்றும் ஆம்பூர் டவுன் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சிகளைச் சோதித்த போது, அந்த சிறுமி ஆம்பூர் டவுன் எல்லைப் பகுதியைத் தாண்டி, ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்குச் செல்லும் பேருந்தில் பயணித்து, அங்குப் பேருந்தை விட்டு இறங்கி தனியாக நடந்து சென்றது தெரியவந்தது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

தகவலை அறிந்ததும் ஆலங்காயம் பகுதிக்கு விரைந்த தனிப்படைப் காவல்துறையினர், அப்பகுதியில் தீவிரத் தேடுதல் நடத்திச் சிறுமியைப் பத்திரமாக மீ்ட்டனர். புகார் அளிக்கப்பட்ட ஒரே மணி நேரத்திற்குள் சிறுமியை மீட்ட காவல்துறையினர், ஆம்பூர் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

காவல் துறையினரின் இந்த மின்னல் வேகச் செயல்பாட்டையும், சிறுமியை மீட்ட சாதுரியத்தையும் சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.