வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 ராட்டினப் பணியாளர்கள் பத்திரமாக மீட்பு!

 
வெள்ளாற்றில் வெள்ளம் மீட்பு ராட்டின

பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளாற்றில் திடீரென ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆற்றுப் படுகையின் நடுவே சிக்கித் தவித்த 9 ராட்டினப் பணியாளர்களைத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கயிறு கட்டி அதிரடியாக மீட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசிதமான முயற்சியால் 9 பேரின் உயிர்களும் காப்பாற்றப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, வெள்ளாற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அச்சமயத்தில், அங்குப் பொழுதுபோக்கு ராட்டினப் பணிகளுக்காகக் கரையோரத்திலும் ஆற்றின் இடைப்பகுதியிலும் தங்கியிருந்த 9 பணியாளர்கள், நீர்மட்டம் திடீரென உயர்த்ததால் கரையோரத்திற்கு வர முடியாமல் ஆற்றின் நடுவே உள்ள பகுதியில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுச் சிக்கிக் கொண்டனர். சீறிப்பாய்ந்து வந்த வெள்ள நீரால் சூழப்பட்டு, மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் அனைவரும் உயிருக்குப் பயந்து அலறித் துடித்தனர்.

ஆற்று வெள்ளத்தில் 9 பேர் சிக்கியிருக்கும் அதிர்ச்சித் தகவலை அறிந்த உடனடியாக, பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் அதிநவீன மீட்புக் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்தபோதிலும், சற்றும் தாமதிக்காமல் தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் மரங்கள் மற்றும் கரைகளில் பலமான கயிறுகளைக் கட்டி, ஆபத்தான சூழலிலும் ஆற்றுக்குள் இறங்கிச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தத் தீவிர போராட்டத்திற்குப் பிறகு, வெள்ளத்தில் தவித்த 9 ராட்டினப் பணியாளர்களையும் தீயணைப்பு வீரர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வந்தனர். தீயணைப்பு வீரர்களின் இந்தத் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டிய அப்பகுதி பொதுமக்கள், பேரிடர் காலங்களில் ஆறுகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.