"ஈரானின் 9 போர்க்கப்பல்கள் மூழ்கடிப்பு; தலைமையகம் அழிப்பு" - டிரம்ப் தகவல்!
மத்திய கிழக்கு பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிராக அதிரடியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்கப் படைகள் ஈரானின் 9 போர்க்கப்பல்களை மூழ்கடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கடற்படை ரீதியாகவும் ஈரான் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அமெரிக்கப் படைகள் ஈரானின் 9 கடற்படைக் கப்பல்களைத் தாக்கி அழித்துள்ளன. இவற்றில் சில மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான போர்க்கப்பல்கள் ஆகும்.ஈரானின் கடற்படைத் தலைமையகத்தின் ஒரு பெரும் பகுதியை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

"மீதமுள்ள ஈரானியக் கப்பல்களையும் நாங்கள் தேடி வருகிறோம். அவை விரைவில் கடலுக்கு அடியில் மிதக்கும் (அதாவது மூழ்கடிக்கப்படும்)" என அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக, 'ஆபிரகாம் லிங்கன்' என்ற அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க்கப்பல் மீது ஈரான் புரட்சிகரக் காவல்படையினர் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்கக் கப்பல் சேதமடைந்ததாக ஈரான் தரப்பில் கூறப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே அமெரிக்கா ஈரானின் 9 கப்பல்களை மூழ்கடித்துள்ளதாகத் தெரிகிறது.

மத்திய கிழக்கு பதற்றத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஈரான் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது: ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகரக் காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.
ஈரான் தனது நாட்டைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம் எனக் கூறியுள்ளதால், மத்திய கிழக்கு பகுதியில் முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தத் தொடர் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
