ரூ.2 லட்சத்திற்கு ஏலம் போன எலுமிச்சை பழங்கள்!
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டனந்தல் கிராமத்தின் அருகே அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் கோயில். இங்கு 5 அடி உயரமான முருகனின் வேல் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுத்தோறும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த 9 நாட்களிலும், கோயிலில் இருக்கும் 5 அடி உயர வேலில் ஒவ்வொரு எலுமிச்சை பழம் சொருகி வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.
இந்த 9 எலுமிச்சை பழங்களும் ஏலம் விடப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், சேலம், பெரம்பலூர், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.100 ரூபாய்க்கு தொடங்கி 1000, 2000, 3000 வரை ஏலம் சென்றது. அதிகபட்சமாக முதல் நாள் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை 50,500 ரூபாய்க்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்தாஸ்-கனிமொழி தம்பதி ஏலத்தில் எடுத்தனர்.
2 ஆம் நாள் திருவிழாவில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழம் ரூ.26,500க்கும், 3ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.42,100க்கும், 4 ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.19 ஆயிரத்திற்கும், 5ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.11 ஆயிரத்திற்கும், 6ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.34 ஆயிரத்திற்கும், 7ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.24,500க்கும், 8ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.13,500க்கும், 9ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.15 ஆயிரத்திற்கும் என மொத்தம் சேர்த்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 100க்கு ஏலம் போனது.
விடிய, விடிய நடைபெற்ற இந்த ஏலத்தில் எலுமிச்சை பழம் எடுத்த தம்பதியினர் ஈரத்துணியுடன் வந்து கோயில் பூசாரியை வணங்கிய பிறகு ஏலம் எடுக்கப்பட்ட எலுமிச்சை பழத்துடன் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை மலைக்குன்றின் மீது அமைந்துள்ள ரத்தினவேல் முருகன் கோயில் சன்னதி முன்பு ஏலம் எடுத்த தம்பதியினர் அங்கு அமர்ந்து பிரசாதத்துடன் எலுமிச்சை பழத்தை சாப்பிட்டு விட்டு, முருகனிடம் மனமுருகி வழிபாடு நடத்தி விட்டு செல்கின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!