கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி; பலர் மருத்துவமனையில் அனுமதி - நாகாலாந்தில் துயரம்!
நாகாலாந்து மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள போதிலும், கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. இருப்பினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது மற்றும் கள்ளச்சாராயம் விற்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாகாலாந்தின் துவன்சங் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை முற்றிலுமாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
