9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை... சாத்தான்குளம் வழக்கு 2020லிருந்து 2026 வரை கடந்து வந்த பாதை - ஒரு பார்வை!

 
சாத்தான்குளம் சாத்தான்குளம்

கடந்த 6 வருட கால போராட்டத்திற்கு நீதி கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட வழக்கில், நீதிக்கான பயணம் இன்று ஒரு முக்கியக் கட்டத்தை எட்டிய நிலையில், இதில் சம்பந்தப்பட்ட 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தண்டனை விவரங்களை வாசித்த நீதிபதி முத்துக்குமரன், இந்த வழக்கைக் 'கொடூரமான செயல்' எனக் குறிப்பிட்டு "சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, பழிவாங்கும் நோக்கில் தந்தை மற்றும் மகனை அடித்துக் கொன்றுள்ளது சமுதாயத்தில் மிகப்பெரிய கொடுமையாகும்" என்றார்.

2020: கருப்பு ஜூன் மற்றும் தொடக்கக்கட்ட அதிர்வுகள்

ஜூன் 19: ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரைச் சாத்தான்குளம் போலீசார் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து விடிய விடியக் கொடூரமாகத் தாக்கினர்.

ஜூன் 20: பலத்த காயங்களுடன் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

ஜூன் 22 & 23: சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பென்னிக்ஸ் ஜூன் 22-லும், தந்தை ஜெயராஜ் ஜூன் 23-லும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

சாத்தான்குளம் தந்தை மகன்

2020: விசாரணைப் பரிமாற்றம்

ஜூலை - ஆகஸ்ட்: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு முதலில் சிபிசிஐடி (CB-CID) வசம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சிபிஐ (CBI) வசம் மாற்றப்பட்டது.

கைது: ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2021 - 2025: நீண்ட நெடிய சட்டப் போராட்டம்

சிபிஐ சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட போலீசார் பலமுறை ஜாமீன் கோரியும், வழக்கின் தீவிரத்தைக் கருதி நீதிமன்றம் தொடர்ந்து ஜாமீனை மறுத்து வந்தது.

சாத்தான்குளம்

2026: தீர்ப்பு மற்றும் தண்டனை அறிவிப்பு

மார்ச் 23: மதுரை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாரும் "குற்றவாளிகள்" என அதிரடித் தீர்ப்பளித்தது. (சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை விசாரணையின் போது உயிரிழந்ததால், மற்ற 9 பேர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது).

ஏப்ரல் 2 - 3: தண்டனை விவரங்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரிய நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி "பாரபட்சமின்றி அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது.

ஏப்ரல் 6 (இன்று): இன்று காலை அறிவிக்கப்பட வேண்டிய தண்டனை விவரங்கள், மதியம் 3:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு மீண்டும் தண்டனை விவரங்கள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று மாலை 5.50 மணிக்கு நீதிபதி முத்துக்குமரன் தண்டனை விவரங்களை வாசித்தார்.

"காவல் நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகக் கொடுமையானவை. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதே சரியான நீதியாக இருக்கும்" என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய நீதிபதி, குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்ட முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு காவலரான பால்துரை, விசாரணையின் போதே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.