"தவெக மாற்றுக்கட்சி அல்ல, தாய்க்கட்சி - 90% அதிமுகவினர் எங்களுடன் இணைவார்கள்” - ஆதவ் அர்ஜுனா முழக்கம்!

 
ஆதவ் ஆதவ்

உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அதிமுகவின் 4 முக்கிய முன்னாள் அமைச்சர்களும், 7 எக்ஸ் எம்எல்ஏக்களும் இன்று தவெகவில் இணைந்த  கட்சித் தாவல் சம்பவம் தமிழக அரசியலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில், அதுகுறித்து ஆளுங்கட்சியான தவெகவின் முக்கிய முகமும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா ஆவேசமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அதிமுகவிலிருந்து முக்கிய விஐபிக்கள் தவெகவிற்குப் படையெடுத்து வருவது குறித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெகவின் அரசியல் கட்டமைப்பு மற்றும் உட்கட்சிச் சூழல் குறித்துப் பெருமிதத்துடன் பேசினார்.

"தமிழக வெற்றிக் கழகம் என்பது மற்ற கட்சிகளைப் போல அதிகாரப் போட்டிக்காகவோ அல்லது வாரிசு அரசியலுக்காகவோ நடத்தப்படும் ஒரு மாற்றுக்கட்சி அல்ல; இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமான ஒரு 'தாய்க்கட்சி'. மற்ற கட்சிகளில் நிலவுவதைப் போன்ற உட்கட்சிப் பூசல்களோ அல்லது பதவிகளுக்கான அதிகாரப் போட்டிகளோ தவெகவில் எப்போதுமே கிடையாது."

தவெக

அதிமுகவின் தற்போதைய பலவீனமான சூழலையும், எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவத்தையும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

"அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்களது தாய் முகாமிலிருந்து  விலகி தவெகவில் இணைய முழுமுதற் காரணம் எடப்பாடி பழனிசாமி தான். அவரது தவறான அரசியல் நகர்வுகள்தான் இதற்குக் காரணம். அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளைப் பெறாமல் தவெக இந்த பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. இனிவரும் நாட்களிலும், சுமார் 90 சதவீத அதிமுகவினர் தவெகவில் இணைவது என்பது 100% உறுதி" என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளபடி, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மாவட்டங்களில் இந்த மெகா கட்சித் தாவல், தமிழகத்தின் எதிர்கால அரசியல் அதிகாரப் போக்கை யாருக்குச் சாதகமாக மாற்றியமைக்கப் போகிறது என்ற பலத்த விவாதத்தை அரசியல் வட்டாரங்களில் கிளப்பியுள்ளது.