தீபாவளிக்கு 95 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்கப் பரிசீலனை!

 
தீபாவளி ரயில்

இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் 8-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தலைநகர் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடத் தயாராகிவரும் பொதுமக்களின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சார்பில் மொத்தம் 95 சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கம்போல் இந்த ஆண்டும் தீபாவளியைக் கொண்டாடச் சென்னையிலிருந்து சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் ரயில்களிலேயே பயணிக்க விரும்புவதால், வழக்கமான முன்பதிவுகள் தொடங்கும்போதே சில நிமிடங்களிலேயே அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் தற்போது காத்திருப்புப் பட்டியலில் தவித்து வருகின்றனர்.

பயணிகளின் இந்தச் சிரமத்தைப் போக்கும் வகையிலும், பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்

இது குறித்துத் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது தெற்கு ரயில்வேயின் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 85 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால், நடப்பாண்டு பொதுமக்களின் கூடுதல் தேவையை மனதிற்கொண்டு, அதைவிடச் சற்று கூடுதலாக 95 சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகளின் உண்மையான தேவையையும் கூட்ட நெரிசலையும் பொறுத்து கடைசி நேரத்தில் இந்த எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்படலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களில் எப்போதும் தட்டுப்பாடு நிலவுவது வழக்கம். குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே தீர்ந்துவிட்டது.

ரயில்

இதனைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட தென் மாவட்டங்களின் முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் சுமார் 20 சிறப்பு ரயில்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தேவையின் அடிப்படையில் மேலும் பல சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான பரிந்துரைகள் விரைவில் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும், முறையான அனுமதி கிடைத்தவுடன் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.