குடியிருப்புக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு - கன்னியாகுமரியில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை கிராமத்தின் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 9 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.
கடுக்கரை கிராமத்தில் இன்று காலை திடீரென நுழைந்த பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று, அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டி ஒன்றை இரையாக முழுமையாக விழுங்கியது.

ஆட்டுக்குட்டியை விழுங்கியதால் அந்த மலைப்பாம்பால் அங்கிருந்து நகர முடியாமல் போனது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனக்காப்பாளர்கள் அடங்கிய குழுவினர், பொதுமக்கள் உதவியுடன் 9 அடி நீள மலைப்பாம்பைச் சாதுரியமாகப் பிடித்தனர்.
சாக்குப்பையில் பத்திரமாக அடைக்கப்பட்ட அந்த மலைப்பாம்பு, கீரிப்பாறை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. வனத்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கையைப் பாராட்டி அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
