தாயைக் கத்தியால் குத்திவிட்டு மாடியில் இருந்து குதித்து 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை - அசாமில் அதிர்ச்சி!
அசாம் மாநிலம் கவுகாத்தியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன், தனது தாயைக் கத்தியால் குதித்து விட்டுத் தானும் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அசாமின் கவுகாத்தி நகர் பாமுனி மைதம் பகுதியில் வசித்து வந்த மாணவன், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளான். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் வீட்டில் இருந்த தனது தாயைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளான்.
தாயைத் தாக்கிய பிறகு வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சிறுவன், தன் தாய் மீதான தாக்குதல் குறித்துப் பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளான். மேலும், தன் வீட்டைக் கண்டுபிடித்துத் தனது தாய்க்கு உடனடியாக உதவுமாறும் தனது வகுப்புத் தோழர்களிடம் அவன் கேட்டுக் கொண்டுள்ளான்.

அதன்பிறகு கவுகாத்தி நகரின் ஏபிசி பகுதிக்குச் சென்ற அந்த மாணவன், அங்குள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
படுகாயங்களுடன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனின் தாயை மீட்ட அக்கம் பக்கத்தினர், கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிறுவன் ஏன் இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டான் என்பதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியத் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடத் தமிழக அரசின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 - 24640050 (24 மணி நேரமும் செயல்படும்). மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணி நேரமும் செயல்படும்)
