போக்குவரத்து வசதி இல்லாத கிராமம்!! தொட்டில் கட்டி கர்ப்பிணி பெண்ணை தூக்கி சென்ற அவலம்!!

 
கர்ப்பிணி பெண்

நவீனமயமாகி வரும் இன்றைய காலக்கட்டத்தில் பேருந்து வசதி, போக்குவரத்து வசதி, சாலை வசதி, மின் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களும் உண்டு. இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாத கிராம மக்கள் தினந்தோறும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். கேரளாவில் போக்குவரத்து வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி  சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

டெல்லியில் பேருந்திலேயே பிரசவம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வனப்பகுதியில் உள்ள மலை கிராமம் ஒன்றில் பழங்குடியின கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆற்றில் பாலம் இல்லாததால் அந்த கிராமத்துக்கு போக்குவரத்து வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை அங்கு நிலவுகிறது. இதனால் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மூங்கிலில் தொட்டில் கட்டி சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு உள்ளூர்வாசிகள் தூக்கி வந்தனர்.

கர்ப்பிணி பெண்

பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அப்பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அப்பெண்ணை தொட்டிலில் தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இதனால் இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

From around the web