டிரோன், ஏர் பலூன் பறக்க தடை.. மீறினால்? - காவல்துறை எச்சரிக்கை !!

வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினவிழா டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டபட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளள மத்திய உள்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா வெளியிட்ட உத்தரவில், டெல்லியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும், பயங்கரவாதிகளும், இந்தியாவுக்கு எதிரானவர்களும் டிரோன்கள், பாராகிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் ஆகியவற்றை பறக்கவிட்டு பொதுமக்களுக்கும், தலைவர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும். இதை கருத்தில் கொண்டு, டெல்லி வான்பகுதியில் டிரோன்கள், பாராகிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள், பாரா மோட்டார்கள், ஏர் பலூன்கள் ஆகியவற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் இந்த தடை அமலில் இருக்கும். தடையை மீறி, யாராவது இந்த பொருட்களை பறக்கவிட்டால், இந்திய தண்டனை சட்டத்தின் 188-வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். விமான நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதுபோல் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.