பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதை! கோல் போஸ்ட் சாய்ந்து விழுந்ததில், சுயநினைவை இழந்த 7 வயது மாணவி! 5 பேர் மீது வழக்குப்பதிவு!

 
கோல் போஸ்ட்

தனியார் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், பள்ளி மைதானத்தில் இருந்த கோல் போஸ்ட் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 வயது மாணவி படுகாயமடைந்து, சுயநினைவை இழந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள குளோபல் நக்சத்ரா அப்பார்மெண்டில் வசித்து வருபவர் ஹேமந்த் குமார் பாக்மர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மனைவி எத்தன், பாக்மர் என்ற 10 வயது மகன், குஷி பாக்மர் என்ற 7 வயது மகளுடன் இந்த குடியிருப்பில் கடந்த 2 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோவை கொடிசியா சாலையில் உள்ள ராக்ஸ் என்ற தனியார் பள்ளியில் ஹேமந்த்குமாரின் குழந்தைகளான எத்தன் பக்தர் 5ம் வகுப்பும், குஷி பாக்மர் 3ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கோவை
இந்நிலையில் மாணவி குஷி பாக்மர் கடந்த 22ம் தேதி மதியம் 1 மணியளவில் உணவு இடைவெளியின் போது, பள்ளி வளாகத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது மைதானத்தில் இருந்த கோல்போஸ்ட்டை பிடித்து மாணவ, மாணவிகள் தொங்கிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கோல்போஸ்ட் சாய்ந்ததில் குஷி பாக்மருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர். இதை கேட்டு விரைந்து வந்த பள்ளி நிர்வாகத்தினர் குஷி பாக்மரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்னர். பின்னர் இது குறித்து மாணவியின் தந்தை ஹேமந்த் குமார் பாக்மருக்கு தகவல் கொடுத்தனர்.

கோவை

விரைந்து வந்த ஹேமந்த் குமார், மருத்துவர்களிடம் விசாரித்ததில் அவரது மகளுக்கு தலையில் பல்வேறு இடங்களில் அடிபட்டு பின்பக்க மூளையில் ரத்த கசிவு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த் குமார், அலட்சியமாக செயல்பட்ட பள்ளி  நிர்வாகத்தின் மீது பீளமேடு போலீசில் புகார் அளித்தார். மேலும் குழந்தைகளை தன்னிச்சையாக விளையாட அனுமதித்த பள்ளித் தாளாளர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் ரூடால்ப், ஆசிரியை அமரீஸ்வரி மற்றும் விளையாட்டு ஆசிரியர் சீனிவாசன், பரத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனது புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் 7 வயது சிறுமி தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web