இடைத்தேர்தல்.. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டி?

 
n

தமிழகத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா, கடந்த 4ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் வரவுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. திமுக சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2ஆவது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈவெரா.வின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

kamal

இந்த நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட போவதாகவும் தகவல் பரவி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் காங்கிரஸ், திமுக இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை ரத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். ராகுலுடன் சாலையில் சிறிது தூரம் நடந்துசென்ற அவர் பின்னர் கூட்டத்தில் காங்கிரஸை புகழ்ந்து பேசினார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றபோது அவரை வாழ்த்தி கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

fg

தொடர்ந்து நெருக்கம் காட்டி வருவதால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இணைவார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என தகவல் பரவுகிறது. 

எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே உறுதியாக தெரியவரும் என கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியினர் கூறுகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு கமல்ஹாசன் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web