ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு.. வட மாநில இளைஞருக்கு நடந்த விபரீதம் !!

 
trainn

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்கத்திலிருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த ரயிலில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரோனி சேட் (24) இளைஞர் சென்னைக்குக் கட்டட வேலை பார்க்க வந்துகொண்டிருந்தார். வழக்கமாக கொருக்குப்பேட்டைப் பகுதியில் ரயில் சிக்னலுக்காக மெதுவாகதான் செல்லும். அதேபோல, அந்த ரயிலும் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது.

ரோனி சேட் ரயில் படியில் அமர்ந்து தன்னுடைய போனைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ரயில் தண்டவாளத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென அவரின் போனைப் பறித்திருக்கிறார். எனினும் சுதாரித்த ரோனி சேட், தனது செல்போனை விடாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், அந்த மர்மநபர் போனைப் பிடித்து இழுத்ததால் படியில் அமர்ந்திருந்த ரோனி சேட் செல்போனோடு ரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

trainn

இதில், அவரின் தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் கொட்டியது. செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பியோடினார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்குசென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரோனி சேட்டை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வழியில் இறந்துவிட்டதாக கூறினர். 

பின்னர் இது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், செல்போன் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (19), விஜய் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர சோதனை நடத்திய போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். 

trainn

இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொருக்குப்பேட்டை உள்ளிட்ட அப்பகுதிகளில் ரயில்கள் மெதுவாக செல்லும்போது, இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

From around the web