மருத்துவரின் அலட்சியம்.. பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் நடந்த விபரீதம் !!
அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா நகரில் மகேந்திர சைனி - ராதா தம்பதி வசித்து வருகின்றனர். இதில் ராதா தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து ராதா தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற சென்றார். அங்கு சிறிது காலம் மருந்து சாப்பிட்டும் வயிற்றுவலி சரியாகவில்லை. பின்னர் அறுவை சிகிச்சை செய்தால் குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறினர்.
இதைடுத்து கடந்த நவம்பர் மாதம் ராதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்தது. இதனால் அவர் பெரும் அவதியடைந்து வந்தார். இந்தநிலையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு சென்று அப்பெண் முறையிட்டார்.

எனினும் முறையான பதில் கிடைக்காததால், வேறொரு தனியார் மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தார். அதன்படி அந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அதிர்ச்சி அளிக்கும் வகையில் விவரம் தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணின் வயிற்றுக்குள் பேண்டேஜ் இருந்தது.
இதனை கேட்டு ராதாவும் அவரது கணவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பேண்டேஜ் அகற்றப்பட்டது. இருப்பினும், ராதாவின் உடல் நலம் தொடர்ந்து மோசமடைந்து அவர் உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். உடற்கூராய்வு செய்து அந்த முடிவுகளின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் உறுதி அளித்துள்ளார்.
