நடுவானில் என்ஜின் கோளாறு!! 197 பயணிகள் பத்திரமாக தரையிறக்கம்!! திக் திக் நிமிடங்கள்!!

 
விமானம்

 

சவுதி அரேபியாவில் இருந்து கோழிக்கோட்டிற்கு 197 பேருடன் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தில்  திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரயிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பயணிகள் சற்று பீதி அடைந்தனர்.  சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு ஒரு தனியார் விமானம் நேற்று மாலை புறப்பட்டது. விமானத்தில் 3 குழந்தைகள் உள்பட 191 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 197 பேர் இருந்தனர்.  

விமானம்

 

இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ஜெட்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு ஒரு தகவல் வந்தது. அதில் விமானம் ஓடுபாதையில் இருந்து வானில் எழுந்த போது, விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தின் டயர் பாகங்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து விமானி, விமான என்ஜின் பாகங்களை ஆய்வு செய்த போது அதில் கோளாறு இருப்பது தெரியவந்தது. பின்னர் தனியார் விமானத்தின் விமானி இதுபற்றி கோழிக்கோடு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விமானத்தை உடனடியாக கொச்சியில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்க அறிவுறுத்தினர்.

விஸ்டா விஸ்தாரா விமானம்

மேலும் விமானம் பத்திரமாக தரை இறங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதையடுத்து நேற்றிரவு     விமானம் கொச்சி நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 191 பயணிகள்,   2 விமானிகள், 4 ஊழியர்கள் என    அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். இது பற்றி விமான நிலைய அதிகாரி கூறுகையில், விமானத்தில் கோளாறு இருப்பது தெரியவந்ததும், விமானத்தை பத்திரமாக இறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதனால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை, என்றார். நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட என்ஜின் கோளாறால் பயணிகள் வாழ்வா சாவா என்று எண்ணி அச்சமடைந்தனர். பத்திரமாக தரை இறங்கிய பின்னரே சற்று நிம்மதியடைந்தனர்.

From around the web