நாய் கூட சாப்பிடாது... கையில் தட்டுடன் கண்ணீர் வடித்த காவலர்!! வைரல் வீடியோ

 
மனோஜ் குமார்

உத்தர பிரதேசத்தில் போலீசாருக்கு வழங்கப்படும் தரமற்ற உணவுக்கு எதிராக காவலர் ஒருவர் கையில் தட்டுடன் கண்ணீர் விட்டபடி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். 2018-ம் ஆண்டு பேட்ச் காவலரான இவர், தற்போது ஃபிரோசாபாத் பகுதியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஃபிரோசாபாத்தில் காவலர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, காவல்துறை துணை ஆணையருக்கு (டிசிபி) எதிராகச் சாலையில் உணவுத் தட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் நேற்று மனோஜ் குமார் ஈடுபட்டிருக்கிறார்.

மனோஜ் குமார்

இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், “உணவுத் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. இதனை ஒரு நாய் கூட சாப்பிடாது. நாங்கள் இந்த உணவை சாப்பிட முடியாது. எங்களது வயிற்றில் எதுவும் இல்லாதபோது, நாங்கள் எப்படி எங்களுடைய கடமைகளை செய்ய முடியும்?. 

இது தொடர்பாகக் காவல்துறையில் யாரும் எங்கள் புகாரைக் கேட்கத் தயாராக இல்லை. இது குறித்துப் பேசினால் எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டி.ஜி.பி-யிடம் புகார் செய்ய முயன்றபோது, ​​தொலைபேசி இணைப்பைத் துண்டிக்குமாறு கடிந்துகொள்கிறார். பணிநீக்கம் செய்துவிடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். இது மாதிரியான அழுத்தங்கள் காரணமாகத்தான் காவலர்கள் பலர் தற்கொலை செய்துகொள்கிறாரகள்” எனக் காவலர் மான்ஜோ குமார் குமுறுகிறார்.


அவரது கண்ணீர் பேச்சு அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும், உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு காவலர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கின்றனர். அதனடிப்படையில் மாவட்ட காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

தற்போது உணவின் தரம் குறித்து குற்றம்சாட்டியிருக்கும் காவலர் மனோஜ் மீது இதுவரை 15 முறை துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

From around the web