பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி சோப் பவுடர்… கையும் களவுமாக சிக்கிய கும்பல்…

 
போலி சோப் பவுடர்

சென்னையில் ரூ. 1 கோடி மதிப்பிலான போலி சோப்பு பவுடர்கள், அதனை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள கிடங்குகளில் பிரபல நிறவனத்தின் பெயரில் போலி வாஷிங் பவுடர் தயாரிக்கப்பட்டு வருவதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு திரவம் தயாரித்து வந்தது தெரிய வந்தது.

போலி சோப் பவுடர்

இதனையடுத்து ரூ. 1 கோடி மதிப்பிலான 500 மூட்டை சோப்பு பவுடர், 50 கேன் சோப்பு திரவம், 6 பேக்கிங் இயந்திரங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் போலி வாஷிங் பவுடர் தயாரித்து வந்த மேனேஜர் முகமது இப்ராஹிம், சூப்பர்வைசர் ரவி மற்றும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி சோப் பவுடர்

இந்த கும்பல் ஸ்ரீ ராம்நகர், புவனேஸ்வரி நகர், சாந்தி நகர் ஆகிய மூன்று இடங்களில் குடோன்கள் அமைத்து மிகவும் பிரபலமான நிறுவனத்தின் பெயர்களில் போலியான துணி பவுடர் மற்றும் லிக்யூட்களை தயாரித்து பருப்பு மூட்டைகளில் பேக் செய்து பருப்பு விற்பனை போலவே கள்ளத்தனமாக ஆந்திரம், கேரளா, கர்நாடகா, தமிழகம் என நான்கு ஆண்டுகளாக விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

From around the web