முதல் டி-20 கிரிக்கெட்.. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

 
harthi pandia

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

20 ஓவர் தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களம் இறங்குகிறது. துணைகேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

harthi pandia

கடைசியாக ஆடிய 11 இருபது ஓவர் போட்டி தொடர்களில் தொடரை இழக்காமல் வீறுநடை போடும் இந்திய அணி, ஒருநாள் போட்டி தொடரை போல் இந்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நியூசிலாந்து அணி ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணியின் பேட்டிங்கில் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய டிவான் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், பின் ஆலென், ஆல்-ரவுண்டர்கள் மிட்செல் சான்ட்னெர், டேரில் மிட்செல் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். பந்து வீச்சில் லோக்கி பெர்குசன், பிளேர் டிக்னெர், ஜேக்கப் டப்பி, சோதி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி அதற்கு பதிலடி கொடுக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். 

harthi pandia

இவ்விரு அணிகள் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 22 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இந்திய அணி 12 ஆட்டங்களிலும், நியூசிலாந்து அணி 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல்: இந்தியா: சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங். குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல்,

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), பிளேர் டிக்னெர், சோதி, பென் லிஸ்டெர், லோக்கி பெர்குசன். 

From around the web