உலகக் கோப்பை ஹாக்கி: இன்று முக்கிய போட்டியில் இந்தியா-ஜப்பான் மோதல் !!

 
india hockey

15ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. வெற்றிக்கான கோல் அடிக்க இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்துபடைத்தனர்.

இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

india hockey

மற்றொரு கால்இறுதியில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை துவம்சம் செய்து எளிதாக அரை இறுதிக்குள் புகுந்தது. இந்த ஆட்டத்தில் 28-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் தென்கொரியா வீரர் ஜான்க் ஜோங்யுன் அடித்த பந்து நெதர்லாந்து வீரரின் ஸ்டிக்கில் பட்டு எகிறி அருகில் நின்ற நடுவர் பென் கோன்ட்ஜெனின் (ஜெர்மனி) முகத்தில் தாக்கியது. 

இதனால் வலியில் துடித்த அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வெளியே அழைத்து சென்றனர். அவருக்கு பதிலாக மாற்று நடுவர் களம் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இடையில் போட்டி சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

india hockey

இந்த சூழலில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஜப்பான் அணிகள் மோதுகின்றன. 9 முதல் 16ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானுடன் மோதும் போட்டி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

From around the web