ஜே.என்.யு. பல்கலை.யில் மின்சாரம் துண்டிப்பு.. மாணவர்கள் மீது கல்வீச்சு.. இரவில் பதற்றம் !

 
jnu

பி.பி.சி., ஆவணப்படத்தை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட திட்டமிட்டுள்ள நிலையில், மாணவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம் 'இந்தியா மோடிக்கான கேள்விகள்' என்ற தலைப்பில், இரண்டு பாகங்களாக ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், 2002ஆம் ஆண்டு பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஆய்வுகள் செய்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

jnu

இந்த நிலையில், நேற்று (ஜன.24) டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) மாணவர்கள் அமைப்பு, பிபிசி ஆவணப்படத்தை இரவு 9 மணிக்கு திரையிட போவதாக அறிவித்தனர். இதற்கு பல்கலைக்கழகம் மற்றும் பாஜகவின் மாணவ அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் , மின் விநியோகத்தையும், இணையதளத்தையும் துண்டித்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் இருளில் மூழ்கின. எனினும் ஆவணப்படம் குறித்த க்யூஆர் கோடு மூலம் படத்தை மாணவர்கள் சிலர் மொபைலில் டவுன்லோடு செய்து பார்த்தனர். இதன் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

jnu

இந்நிலையில் மொபைலில் படம் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது மர்ம கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஏபிவிபி மாணவ அமைப்பினர் தான் வன்முறை செயலில் ஈடுபட்டதாக, ஆவணப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த மாணவ அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கல்வீச்சு புகாரை போலீசார் மறுத்துள்ளனர். இதனால் இரவில் ஜே.என்.யு வளாகம் இரவில் பரபரப்பாக காணப்பட்டது.

From around the web