நம்பர் பிளேட்டில் தலைவர்கள், நடிகர்கள் படம் இடம்பெறக் கூடாது!! மீறினால் அதிக பட்ச அபராதம்!

 
மதுரைக்கிளை

வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இரு சக்கர வாகன உரிமையாளர்கள் , கடந்த 07.08.2021 ல் மத்திய அரசு திருத்தி அமைக்கப்பட்ட இந்திய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அரசு வழங்கியுள்ள வாகன எண்களை அதன் தகட்டில் பதிவிடுவதில்லை, என்றும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்றும் மாறாக, நம்பர் பிளேட்டில், தங்களின் அபிமான அரசியல் தலைவர்கள், நடிகர்கள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள் போன்றவற்றை மிகவும் பெரிதாக பதிவிட்டுக்கொள்கின்றனர்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மதுரைக்கிளை

இது மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989 விதி 50 & 51க்கு எதிரானது. விதிகளை மீறினால் அபராதமும் விதிக்கப்பட வேண்டும். எனவே, வாகனங்களில் நம்பர் பிளேட் விதிகளை பின்பற்றாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் உண்மையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வாகனங்களில் நம்பர் பிளேட்டில் விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சந்திரசேகரன் மனுவில் கூறி உள்ளார்.

வாகனம்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் அரசு விதிமுறைகளின்படி அந்த வாகனத்தின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும், வேறு எந்த வகையிலும் எழுத்தோ, தலைவர்களின் படமோ, நடிகர்களின் படமோ இடம்பெறக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள மண்டல போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள் இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.  

From around the web