ஆக்ரோஷத்தை கக்கும் மாண்டஸ்!! கடல் சீற்றத்தால் 5 வீடுகள் தரைமட்டம்!!

 
புதுச்சேரி 5 வீடுகள் இடிந்து விழுந்தது

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. மாண்டல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனிடையே புயல் எதிரொலியால் புதுச்சேரி பிள்ளைச்சாவடி அருகே மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 5 வீடுகள் இடிந்து விழுந்தது.

அசானி புயல் 

புதுச்சேரிக்கு உட்பட்ட பிள்ளைச்சாவடி மீனவர் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு 500 குடும்பங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள். அதிலும் பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் என்பது அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படக்கூடிய பகுதியாகும். இதனால் தங்கள் பகுதிக்கு தூண்டில் வளைவு அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் தற்காலிகமாக கற்களை கொட்டி கடல் அரிப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு இப்பகுதி மக்கள் அதிகமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது சம்பந்தமாக தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுச்சேரி 5 வீடுகள் இடிந்து விழுந்தது

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் கடல் சீற்றம் அதிகளவில் இருந்து வருகிறது. வழக்கமாக 4 அடி உயரம் எழும் அலைகள், தற்போது 12 அடி உயரத்திற்கு எழும்பி வருகிறது. இதன் காரணமாக 5க்கும் மேற்பட்ட வீடுகள் திடீரென இடிந்து விழுந்து கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. வீடுகளில் உள்ள பொருட்களை இழந்த மக்கள் தற்போது தவித்து வருகின்றனர். அடுத்தடுத்து வீடுகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதேபோல் காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடல் அரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காரைக்கால் துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  

From around the web