தென்காசி அருகே மாணவிகளை கேலி செய்த மர்ம நபர்கள்… கலவர சந்தையாக மாறிய பேருந்து நிலையம்…

 
தாக்குதல்

சுரண்டை பேருந்து நிலையத்தில் மாணவிகளை கேலி கிண்டல் செய்த மர்ம நபர்களை சக மாணவர்கள் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கல்லூரி மாணவர்களை   ஓட,ஓட விரட்டி சரமாரியாக தாக்கினர். இதில் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

தாக்குதல்

கல்லூரி முடிந்து மாணவ, மாணவிகள் சுரண்டை பேருந்து நிலையத்திற்கு மாலையில் திரண்டு வந்து பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த கல்லூரி மாணவிகளை அப்பகுதியை சேர்ந்த சில மர்ம நபர்கள் கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் அந்த மர்ம நபர்களை தட்டிக்கேட்டுள்ளனர். இந்த தகராறில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கல்லூரி மாணவர்களை பேருந்து நிலையத்தில் ஓட,ஓட விரட்டி சரமாரியாக தாக்கினர்.

தாக்குதல்

இதனைக் கண்ட அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அருகில் இருந்த மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதனிடையே அரசு கல்லூரி மாணவர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்சை இன்று சந்தித்து இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web