தேசிய விளையாட்டு போட்டி: பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்!!

 
மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்

குஜராத்தில் நடைபெற்றுவரும் தேசிய விளையாட்டு போட்டியின் பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றுள்ளார். குஜராத்தில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில்  பங்கேற்றுள்ளனர்.

 இந்தப் போட்டியில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இவர் மொத்தம் 191 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். இந்தப் பிரிவில் சஞ்சிதா சானு வெள்ளிப் பதக்கமும், ஒடிசாவின் ஸ்நேகா சோரன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.இதேபோல் வாள்வீச்சுப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான தடகளப் போட்டியில் டிரிபிள் ஜம்பில் பிரிவில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர்  பேசிய மீராபாய் சானு, சமீபத்தில் பயிற்சியின் போது இடது கைமணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதனால் 'ரிஸ்க்' வேண்டாம் என்று தான் இந்த போட்டியில் 3-வது முயற்சியை பயன்படுத்தவில்லை என தெரிவித்தார்.

From around the web